முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணங்கள்: ரூ.7.12 கோடி செலவு - துபாய் கணக்கு மர்மம்!


சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்காக இதுவரை ரூ.7.12 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இதில், 2022ஆம் ஆண்டு துபாய் பயணத்திற்கான செலவு விவரங்கள் தெரிவிக்கப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அவர் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், முதல்வரின் வெளிநாட்டு பயணச் செலவுகள் குறித்த விவரங்களை சமூக ஆர்வலர் காசிமயன் என்பவர் ஆர்.டி.ஐ. மூலம் பெற்றுள்ளார். அந்த தகவலின்படி, 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பயணத்திற்கு ரூ.26.84 லட்சமும், ஜப்பான் பயணத்திற்கு ரூ.88.06 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல, 2024ஆம் ஆண்டில் ஸ்பெயினுக்கு சென்றபோது ரூ.3.98 கோடியும், அமெரிக்கா சென்றபோது ரூ.1.99 கோடியும் செலவிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஆனால், 2022ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றபோது அரசு செலவிட்ட தொகை குறித்த விவரங்கள் ஆர்.டி.ஐ. பதிலில் குறிப்பிடப்படவில்லை. இது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணங்களின்போது அவரது குடும்பத்தினரும் அரசு பணத்தில் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, 2022ஆம் ஆண்டு முதல்வரின் குடும்பத்தினர் மற்றும் கட்சியினரின் பயணச் செலவுகளை தி.மு.க.வே ஏற்றுக் கொண்டதாக விளக்கம் அளித்திருந்தார்.

இருப்பினும், ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவலில் துபாய் பயணச் செலவு குறித்த விவரங்களோ அல்லது முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினரின் பயணச் செலவுகளை தி.மு.க. ஏற்றுக் கொண்டதா என்பது பற்றிய தகவலோ இடம்பெறாதது மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. 

துபாய் பயணத்திற்கான செலவு விவரங்கள் ஏன் வெளியிடப்படவில்லை, முதல்வரின் குடும்பத்தினரின் பயணச் செலவுகள் யார் ஏற்றுக் கொண்டது என்பது போன்ற கேள்விகளுக்கு தற்போது வரை தெளிவான பதில்கள் இல்லை. இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.