காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
மாநில அரசின் பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தபோது வெள்ளிக்கிழமை (மார்ச் 7, 2025) இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்த திட்டம் உடனடியாக தொடங்கப்படும் என்றும் முதல்வர் சித்தராமையா உறுதியளித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மத்தியில் மீண்டும் ஒருமுறை கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மேகதாது அணைத் திட்டம் என்பது கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகும். இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இருப்பினும், கர்நாடக அரசு இந்த அணை குடிநீர் விநியோகத்தை அதிகரிப்பதற்கும், மழைக்காலங்களில் அதிகப்படியான வெள்ள நீர் ஓட்டத்தை நிர்வகிப்பதற்கும் மிகவும் அவசியம் என்று வாதிட்டு வருகிறது.
இந்த அணை கட்டப்படுவதன் மூலம் பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் கர்நாடகா தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஒப்புதலுக்காக கர்நாடகா காத்திருக்கும் நிலையில், தமிழக அரசு இந்த திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.
இந்த விவகாரம் வரும் நாட்களில் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான இந்த நீண்டகால பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்.
இது ஒரு பக்கமிருக்க கடந்த ஆட்சியில் இந்த விவகாரம் குறித்து போராட்டமெல்லாம் செய்த இணைய பிரபலங்கள் இதை பற்றி ஒரு வீடியோ கூட போடலையே என்ன ஆச்சு..? என்று கேள்வி எழுப்பி வருகிறார் இணையவாசிகள்.