"ஏய் ஜொர்தாலேயே உர்ட்டாதே... தொர்ட்டா தூக்கினு தொரத்தாத" என்ற பாடல் வரிகள் மூலம் பிரபலமானவர் ராப் பாடகர் அசல் கோலார். "யார்டா அந்த பையன்.. என்னை சண்டைக்கு கூப்ட்டா" என்ற பாடல் மூலம் இளைஞர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர்.
இந்நிலையில், நேற்று இரவு திடீரென காவல் நிலையத்திற்கு வந்த அவர், தனது மலேசிய நண்பர்களை போலீசார் மிரட்டுவதாக புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "அடிச்சு துன்புறுத்துவது முறையா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபல ராப் பாடகரான அசல் கோலார். கானா மற்றும் ராப் பாடல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
தனது யூடியூப் சேனலில் கானா பாடல்களை பதிவேற்றி பிரபலமான இவர், பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த "லியோ" திரைப்படத்தில் "நா ரெடி தான்" பாடலில் ராப் பாடி அசத்தியிருந்தார்.
தொடர்ந்து "யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்" பாடல் பட்டி தொட்டி எங்கும் கலக்கியது. இன்ஸ்டாகிராம் பக்கங்களில் எங்கு பார்த்தாலும் இந்த பாடல்களே ரீல்ஸ் வீடியோக்களில் அதிகளவில் இடம்பெற்றன.
"என்ன சண்டைக்குக் கூப்டா.." உள்ளிட்ட பாடல்கள் மூலம் மேலும் கவனத்தை ஈர்த்தார் அசல் கோலார். சமீபத்தில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி உடனான உரையாடலில் காதல் குறித்து அவர் தெரிவித்த கருத்து அனைவரையும் கவர்ந்தது.
"காதலிக்கும் பெண் இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு எதிர்பார்க்காம நாம நல்லவனா இருக்கிறது தான் காதல்னு நான் நினைக்கிறேன். அது எனக்கு லேட்டாதான் புரிஞ்சுகிட்டேன்" என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ராப் பாடல்கள் மூலம் வெளிநாடுகளுக்கும் சென்று வரும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். நேற்று இரவு திடீரென செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், தனது மலேசிய நண்பரை குடியுரிமை அதிகாரிகள் கீழ்த்தரமாக நடத்தியதாகவும், கஞ்சா வைத்திருக்கியா என்று மிரட்டியதாகவும் புகார் தெரிவித்தார்.
அசல் கோலார் கூறியதாவது, "மலேசியா நாட்டைச் சேர்ந்த எனது நண்பர் கடந்த 2 மாதமாக சென்னையில் தங்கியிருக்கிறார். அவர் சுற்றுலா விசாவில் வந்துள்ளார். விசா முடிவடையும் நிலையில், அவர் தனது நாட்டில் இருந்து சுற்றுலா விசாவை புதுப்பித்துள்ளார்.
ஆனால், சுற்றுலா விசாவை இங்கு நீட்டிக்க முடியாது என்பது எங்களுக்கு இன்று தான் தெரியும். நானும் எனது மலேசிய நண்பரும் இது தொடர்பாக பல அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து பேசி வருகிறோம். நாங்கள் குடியுரிமை அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்கள் எனது மலேசிய நண்பரிடம் எங்கு தங்கியிருக்கிறாய், எந்த இடம், நண்பர்கள் யார் என தேவையில்லாத கேள்விகளை கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், எனது நண்பரை தனியாக அழைத்து சென்று அவரை அடித்து துன்புறுத்தி, கஞ்சா வைத்திருக்கியா என மோசமாக நடந்துகொண்டனர்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், "நாங்கள் எல்லா ஆவணங்களையும் கொடுத்த பிறகும் எல்லாம் சரிசெய்து தருகிறோம் என்கின்றனர்.
மத்திய அரசின் அதிகாரிகள் ஏன் இப்படி இருக்கின்றனர் என்று தெரியவில்லை. தமிழ்நாடு போலீஸ் தான் எனக்கு உதவி செய்தனர். நான் ஒரு பிரபலம் என்பதால் இந்த பிரச்சினையை எதிர்கொள்ள முடிந்தது.
சாமானிய மக்கள் என்ன செய்வார்கள்?" என்று அசல் கோலார் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். ராப் பாடகர், கானா பாடகர்கள் என்றாலே கஞ்சா என்ற வார்த்தை ஏன் வருகிறது என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர்.
இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.