யம்மாடி.. சஹால் விவாகரத்து..! ஜீவனாம்சம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?


பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா ஆகியோருக்கு மும்பை குடும்ப நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த யுஸ்வேந்திர சஹால், 2020 ஆம் ஆண்டு மாடலும் பாடகியுமான தனஸ்ரீ வர்மாவை காதல் திருமணம் செய்து கொண்டார். 

தனஸ்ரீ வர்மா மாடலிங் துறையில் பிரபலமானவர். மேலும், அவர் பல்வேறு பாடல் நிகழ்ச்சிகளில் பாடகியாகவும் பங்கேற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 

சஹால் மற்றும் தனஸ்ரீ இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் பரவி வந்தன. கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே தனஸ்ரீ வர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சஹாலின் பெயரை நீக்கியது இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்தது. 

இருப்பினும், இருவரும் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. முன்னணி பந்துவீச்சாளராக இருந்த சஹால், 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

ஆனால், சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ரூ.18 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. 

இந்நிலையில், சஹாலும் தனஸ்ரீயும் பரஸ்பரமாக பிரிந்து செல்வதற்கு முடிவு செய்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வரும் மார்ச் 22 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவிருப்பதால், அதற்கு முன்னதாக இந்த விவாகரத்து வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சஹாலின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். 

இதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சஹால் தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.4.75 கோடி வழங்க ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, மும்பை குடும்ப நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், சஹால் மற்றும் தனஸ்ரீயின் நான்கு வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.