பெங்களூருவில் உறவுக்காக மனைவி பணம் கேட்டதாக கணவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்ப்யூட்டர் இன்ஜினியரான ஸ்ரீகாந்த் என்பவர் 2022ஆம் ஆண்டு பிந்துஸ்ரீ என்பவரை திருமணம் செய்துள்ளார்.
திருமணமானதில் இருந்து இருவருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது. குழந்தை பெற்றுக்கொள்வதை மனைவி விரும்பவில்லை என்றும், தனது அனுமதி இல்லாமல் கணவர் தன்னைத் தொடக்கூடாது என்றும், மீறி தொட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மனைவி மிரட்டியதாகவும் ஸ்ரீகாந்த் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிந்துஸ்ரீ கணவருடன் வாழாமல் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த ஸ்ரீகாந்த் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
"திருமணம் ஆனதில் இருந்து எங்களுக்குள் தாம்பத்திய உறவு நடைபெறவில்லை. குழந்தை பெற்றால் தனது அழகு கெட்டுவிடும் என்று மனைவி கூறுகிறார். குழந்தையை தத்தெடுக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்.
என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும் என்றால் ஒவ்வொரு முறைக்கும் ஐந்தாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று மனைவி பணம் கேட்கிறார். தற்போது விவாகரத்து வழங்க வேண்டும் என்றால் 45 லட்ச ரூபாய் கேட்கிறார்" என்று ஸ்ரீகாந்த் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பிந்துஸ்ரீயும் புகார் அளித்துள்ளார். தனது கணவர் ஸ்ரீகாந்த் தன்னிடம் வரதட்சணை கேட்டதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த இருதரப்பு புகார்களின் அடிப்படையில், போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமண உறவில் ஏற்பட்ட இந்த சிக்கல் தற்போது காவல் நிலையம் வரை சென்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் விசாரணையின் முடிவில் உண்மை நிலை என்னவென்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.