நடிகர் விஜய் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை பெங்களூரை சேர்ந்த கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இந்த தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருமான வரித்துறை சோதனையின் விளைவாக, 'ஜனநாயகன்' படப்பிடிப்பில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் படப்பிடிப்புக்கான தினப்படி கொடுப்பனவு (பேட்டா) வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பேட்டா வழங்கப்படாமல் கடந்த மூன்று வாரங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.
இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு எப்போது மீண்டும் தொடங்கும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
தயாரிப்பு நிறுவனம் இந்த பிரச்சனையை விரைவில் சரி செய்து படப்பிடிப்பை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.